8
1 ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான்.
விசுவாசிகளுக்கு உபத்திரவம்
2-3 சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர். அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர்.
4 விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.
சமாரியாவில் பிலிப்பு
5 பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அவன் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான்.
6 அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர்.
7 அம்மக்களில் பலரினுள்ளும் அசுத்த ஆவிகள் இருந்தன. அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போகும்படியாக பிலிப்பு கட்டளையிட்டான். அவை வெளியே வந்தபோது, ஆவிகள் மிகுந்த சத்தமிட்டன. பாரிச வியாதிக்காரர்கள் பலரும், ஊனமுற்றவர்கள் பலரும் அங்கிருந்தனர். பிலிப்பு அவர்களையும் குணப்படுத்தினான்.
8 இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
9 ஆனால் அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். பிலிப்பு அங்கு வருமுன்னர், சீமோன் மந்திர தந்திரங்களைச் செய்தான். சமாரியா மக்களைத் தனது தந்திரங்களால் வியப்புறச் செய்தான்.
10 முக்கியமான, மற்றும் முக்கியமற்ற மக்கள் அனைவரும் சீமோன் கூறியவற்றை நம்பினர். மக்கள், “‘மகத்தான வல்லமை’ எனப்படும் தேவனுடைய வல்லமை இம்மனிதனுக்கு உள்ளது!” என்றனர்.
11 சீமோன் தனது மந்திர தந்திரங்களால் மக்களை நீண்ட நாட்களாக வியக்க வைத்தான். மக்கள் அவனைப் பின்பற்றுவோராயினர்.
12 ஆனால் பிலிப்பு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறஸ்துவின் வல்லமையையும் மக்களுக்கு எடுத்துக் கூறினான். ஆண்களும் பெண்களும் பிலிப்புவை நம்பினர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர்.
13 சீமோனும் கூட நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்றான். சீமோன் பிலிப்புவோடு இருந்து வந்தான். பிலிப்பு செய்த அற்புதங்களையும், வல்லமைமிக்க காரியங்களையும் கண்ட சீமோன் வியப்படைந்தான்.
14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள்.
15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர்.
17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து
19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.
20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய்.
21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை.
22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும்.
23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.
24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.
25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.
எத்தியோப்பிய அதிகாரியும் பிலிப்புவும்
26 தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான்.
27 எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான்.
28 இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார்.
30 எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான்.
31 அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான்.
32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ,
“அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார்.
அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார்.
33 அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது.
அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” ஏசாயா 53:7-8
34 அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான்.
35 பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.
36 அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான்.
37 *
38 அதிகாரி இரதத்தை நிறுத்தக் கட்டளையிட்டான். பிலிப்புவும் அதிகாரியும் நீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான்.
40 ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.
* 8:37: பின்னால் வந்த சில பிரதிகளில் 37 வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. பிலிப்பு பதிலாக, ‘நீ முழு மனதோடு நம்பினால் உன்னால் முடியும்” என்றார். அந்த அதிகாரி, “நான் இயேசு கிறிஸ்துதான் தேவனுடைய குமாரன் என்று நம்புகிறேன்” என்றான்.