இஸ்ரவேலுக்கான சோகப்பாடல் 
5
1 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான். 
2 இஸ்ரவேல் கன்னி விழுந்தாள். 
அவள் இனிமேல் எழமாட்டாள். 
அவள் தனியாக விடப்பட்டாள். புழுதியில் கிடக்கிறாள். 
அவளைத் தூக்கிவிட எவருமில்லை. 
3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: 
“1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள், 
100 ஆட்களோடு திரும்பி வருவார்கள், 
100 ஆட்களோடு நகரை விட்டுப்போன 
அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.” 
கர்த்தர் இஸ்ரவேலரைத் திரும்பிவர உற்சாகப்படுத்துகிறார் 
4 கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்: 
“என்னைத் தேடிவந்து, வாழுங்கள். 
5 ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள். 
கில்காலுக்கும் போகாதீர்கள். 
எல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள். 
கில்காலிலுள்ள ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். 
பெத்தேல் அழிக்கப்படும். 
6 கர்த்தரிடம் போய் வாழுங்கள். 
நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும். 
அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும். 
பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது. 
7-9 நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும். 
தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார். 
அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார். 
அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார். 
அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார். 
அவரது நாமம் யேகோவா. 
அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக 
வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.” 
இஸ்ரவேலர்கள் செய்த பாவச்செயல்கள் 
நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள். 
நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள். 
10 தீர்க்கதரிசிகளே. பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள். 
அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள். 
11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள். 
நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள். 
நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள். 
ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள். 
நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள். 
ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள். 
12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன். 
நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள். 
நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள். 
நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள். 
நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை. 
13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள். 
ஏனென்றால் இது கெட்ட நேரம். 
14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். 
எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும். 
அப்போது நீங்கள் வாழ்வீர்கள். 
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார். 
15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள். 
வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள். 
பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் 
யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார். 
பெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது 
16 என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். 
“ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள். 
ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள். 
ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். 
17 ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள். 
ஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார். 
18 உங்களில் சிலர் 
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள். 
நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்? 
கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும். 
19 நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன், 
கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள். 
நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத் 
தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது. 
பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள். 
20 கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும். 
அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும். 
அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும். 
இஸ்ரவேலின் தொழுதுகெள்ளுதலை கர்த்தர் ஏற்க மறுக்கிறார் 
21 “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன். 
நான் அவற்றை ஏற்கமாட்டேன். 
நான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை. 
22 நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும் 
நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். 
நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள 
கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன். 
23 நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள். 
நான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன். 
24 நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும். 
நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும். 
25 இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும் 
காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள். 
26 ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள். 
நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள். 
27 எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால் 
சிறையாகச் செல்லச் செய்வேன்” 
என்று கர்த்தர் சொல்லுகிறார். 
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன். 
