பலிபீடத்தின் அருகில் கர்த்தர் நிற்கும் தரிசனம் 
9
1 நான் என் ஆண்டவர் பலிபீடத்தின் அருகில் நிற்பதைக் கண்டேன். 
அவர், “நீ, வாசல் நிலைகள் அசையும்படி தூண்களை அடித்து, 
அவற்றை அவர்கள் எல்லாருடைய தலையின் மேலும் விழ உடைத்துப்போடு. 
ஜனங்களில் எவராவது உயிரோடு மீந்தால், பிறகு நான் அவர்களை வாளால் கொல்வேன். 
ஒருவன் வெளியே ஓடிவிடலாம். 
ஆனாலும் அவன் தப்பமுடியாது. 
ஜனங்களில் ஒருவரும் தப்ப இயலாது. 
2 அவர்கள் தரையில் ஆழமாகத் தோண்டிப் போனாலும் 
நான் அவர்களை அங்கிருந்து வெளியே எடுப்பேன். 
அவர்கள் வானம் வரை ஏறிப்போனாலும் 
நான் அவர்களை அங்கிருந்து தரைக்குக் கொண்டு வருவேன். 
3 அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன். 
நான் அவர்களை அங்கிருந்து எடுப்பேன். 
அவர்கள் என்னிடமிருந்து ஓடிக் கடலின் ஆழத்திற்குப் போனாலும் 
நான் பாம்புக்கு கட்டளையிடுவேன், 
அது அவர்களைக் கடிக்கும். 
4 அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களால் கொண்டு செல்லப்பட்டால் 
நான் வாளுக்குக் கட்டளையிடுவேன். 
அது அங்கே அவர்களைக் கொல்லும். 
ஆம் நான் அவர்களைக் கவனிப்பேன். 
ஆனால் நான் அவர்களுக்குத் துன்பம் தரும் வழிகளைக் கொடுப்பதற்கே பார்ப்பேனேயல்லாமல் நன்மையைத்தருவதற்கல்ல” என்றார். 
தண்டனை ஜனங்களை அழிக்கும் 
5 எனது சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொட அது உருகும். 
பிறகு நாட்டில் உள்ள ஜனங்கள் எல்லோரும் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுவார்கள். 
நாடானது எகிப்தின் நைல் நதி போன்று உயர்ந்து தாழும். 
6 கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல் தனது உயர்ந்த அறைகளைக் கட்டினார். 
அவர் பூமிக்குமேல் தன் ஆகாயத்தை வைத்தார். 
அவர் கடலின் தண்ணீரை அழைத்து 
பூமியின் மேல் மழையாக அதனைக் கொட்டுகிறார். 
யேகோவா என்பது அவரது நாமம். 
இஸ்ரவேல் அழியும் என்று கர்த்தர் வாக்குறுதியளிக்கிறார் 
7 கர்த்தர் இதனைச் சொல்கிறார்: 
“இஸ்ரவேலே நீ எனக்கு எத்தியோப்பியர்களைப் போன்றிருக்கிறாய். 
நான் இஸ்ரவேலரை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். 
நான் கப்தோரிலிருந்து பெலிஸ்தியரைக் கொண்டு வந்தேன். 
கீரிலிருந்து சீரியரைக்கொண்டு வந்தேன்.” 
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் பாவமுள்ள இராஜ்யத்தை (இஸ்ரவேல்) கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தர் சொன்னார்: 
“பூமியின் முகத்திலிருந்து இஸ்ரவேலர்களைத் துடைப்பேன். 
ஆனால் நான் யாக்கோபின் குடும்பத்தை முழுமையாக அழிக்கமாட்டேன். 
9 நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 
நான் இஸ்ரவேல் ஜனங்களை அனைத்து நாடுகளிலும் சிதறவைப்பேன். 
ஆனால் இது ஒருவன் மாவை ஜல்லடையில் சலிப்பது போன்றது. 
அவன் ஜல்லடையில் சலிக்கும்போது, நல்ல மாவு கீழே விழுந்துவிடும், 
ஆனால் கோதுமை உமி பிடிபடும். யாக்கோபின் குடும்பத்திற்கும் இவ்விதமாகவே இருக்கும். 
10 “என் ஜனங்களிலுள்ள பாவிகள், 
‘நமக்கு எந்தக் கேடும் ஏற்படாது’ என்கிறார்கள். 
ஆனால் அந்த ஜனங்கள் அனைவரும் வாளால் கொல்லப்படுவார்கள்.” 
இராஜ்யத்தை மீண்டும் நிறுவுவதாக தேவன் வாக்குறுதியளிக்கிறார் 
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது. 
ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன். 
நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன். 
நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன். 
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும், 
என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.” 
கர்த்தர் அவற்றைச் சொன்னார், 
அவர் அவை நடக்கும்படிச் செய்வார். 
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன், 
அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும். 
திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும். 
இனிய மதுவானது குன்றுகளிலும் 
மலைகளிலும் கொட்டும். 
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை 
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன். 
அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள். 
அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள். 
அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள். 
அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள். 
அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள். 
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள். 
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன். 
அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள். 
அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்” 
என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். 
