புதிய உடன்படிக்கை
3
1 நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா?
2 எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள்.
3 கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின்* மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.
4 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது.
5 எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார்.
6 புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.
புதிய உடன்படிக்கையும் மகிமையும்
7 மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது.
8 எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும்.
9 மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும்.
10 பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது.
11 மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.
12 எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம்.
13 நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை.
14 ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது.
15 ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது.
16 ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது.
17 கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு.
18 நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும் மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.
* 3:3: கற்பலகை தேவன் மோசேக்கு கொடுத்தச் சட்டம். அது கற்பலகையில் எழுதப்பட்டிருந்தது. யாத்தி 24:12; 25:16.