பிரசங்கி
1
1 இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன்.
2 எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான்.
3 தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா?
காரியங்கள் என்றும் மாறுவதில்லை
4 ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது.
5 சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது.
6 காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது.
7 அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.
8 வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.
எதுவும் புதியதல்ல
9 துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில்* எதுவும் புதியதில்லை.
10 ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.
11 நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.
ஞானம் மகிழ்ச்சியைக் கொண்டுவருமா?
12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின் அரசனாக இருந்தேன்.
13 நான் கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். எனதே ஞானத்தைப் பயன்படுத்தி வாழ்விலுள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். தேவன் நாம் செய்யும்படி கொடுத்த வேலைகளெல்லாம் கடினமானவை என்று நான் கற்றுக்கொண்டேன்.
14 பூமியின்மேல் செய்யப்படுகிற அனைத்து செயல்களையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் காலத்தை வீணாக்கும் காரியம் என்பதையும் அறிந்துகொண்டேன். இது காற்றைப் பிடிப்பது போன்றதாகும்.
15 நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது.
16 நான் எனக்குள், “நான் மிகவும் ஞானமுள்ளவன். எனக்கு முன்னால் எருசலேமை ஆண்ட மற்ற அரசர்களைவிட நான் ஞானமுள்ளவன். உண்மையில் ஞானம் என்பதும் அறிவு என்பதும் எத்தகையவை என்பதை நான் அறிவேன்” என்று கூறினேன்.
17 முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும் அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக் கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால் ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்க முயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
18 மிகுதியான ஞானத்திலே மிகுதியான சலிப்பும் உள்ளது. அதிகமான ஞானத்தைப் பெறுகிற எவனும் அதிகமான வருத்தத்தையும் அடைகிறான்.