2
1 குரலானது, மனுபுத்திரனே,* எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.
2 பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன்.
3 அவர் என்னிடம் “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தோடு பேசுவதற்கு நான் உன்னை அனுப்புகிறேன். அந்த ஜனங்கள் எனக்கு எதிராகப் பலமுறை திரும்பினார்கள். அவர்களது முற்பிதாக்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பலமுறை பாவம் செய்திருக்கின்றனர். அவர்கள் இன்றும் பாவம்செய்துகொண்டிருக்கின்றனர்.
4 அந்த ஜனங்களோடு பேசவே உன்னை நான் அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசவேண்டும். நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும்.
5 ஆனால் அந்த ஜனங்கள் நீ சொல்வதைக் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். ஆனால் நீ அவற்றைச் சொல்லவேண்டும். எனவே, அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அறிந்துக்கொள்வார்கள்.
6 “மனுபுத்திரனே, அந்த ஜனங்களுக்குப் பயப்படாதே, அவர்கள் சொல்கின்றவற்றுக்கும் பயப்படாதே. இது உண்மை. அவர்கள் உனக்கு எதிராகத் திரும்பி உன்னைக் காயப்படுத்த விரும்புவார்கள். அவர்கள் முட்களைப் போன்றிருப்பார்கள். நீ தேள்களோடு இருப்பதைப் போன்று நினைப்பாய். ஆனால் அவர்கள் சொல்கின்றவற்றுக்கு நீ பயப்படாதே. அவர்கள் கலகக்காரர்கள். அவர்களுக்குப் பயப்படாதே!
7 நான் சொல்கின்றவற்றை நீ அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள், நீ சொல்வதைக் கவனிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள்.
8 “மனுபுத்திரனே நான் உனக்குச் சொல்கின்றவற்றை நீ கவனிக்கவேண்டும். அக்கலகக்கார ஜனங்களைப் போன்று நீ எனக்கு எதிராகத் திரும்பவேண்டாம். உன் வாயைத் திறந்து நான் தரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள். பின்னர் அவ்வார்த்தைகளை அந்த ஜனங்களிடம் பேசு, இவ்வார்த்தைகளை சாப்பிடு” என்றார்.
9 பின்னர் நான் (எசேக்கியேல்) என்னிடம் ஒரு கை நீட்டப்படுவதைக் கண்டேன். அதனிடம் எழுதப்பட்ட சுருள் ஒன்று இருந்தது.
10 நான் அச்சுருளைத் திறந்து முன்னும் பின்னும், எழுதப்பட்டிருப்பதைப் பார்தேன். அனைத்தும் துக்கப் பாடல்களாகவும் துக்கக் கதைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் இருந்தன.