34
1 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்: 
2 “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே, 
நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே. 
3 உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது. 
உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது. 
4 எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம். 
எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம். 
5 யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன், 
தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை. 
6 நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது. 
நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான். 
7 “யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா? 
நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை. 
8 யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான். 
யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான். 
9 ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்? 
ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான். 
10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள். 
தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்! 
சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்! 
11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார். 
ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார். 
12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார், 
சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார். 
13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை, 
உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை. 
தேவன் எல்லாவற்றையும் படைத்தார். 
எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன. 
14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால், 
அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால், 
15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள். 
எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள். 
16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால், 
நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள். 
17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது. 
யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர். 
அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? 
18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார். 
தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்! 
19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை. 
தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை. 
ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார். 
20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும். 
ஜனங்கள் நோயுற்று மடிவார்கள். 
தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள். 
21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார். 
ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார். 
22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம் 
எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை. 
23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. 
தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை. 
24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை. 
தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார். 
25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார். 
அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார். 
26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார். 
பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார். 
27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். 
தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை. 
28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள். 
தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார். 
29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது. 
தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது. 
தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர். 
30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார். 
31 “ஒரு மனிதன் தேவனிடம், 
‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன். 
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும். 
நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம். 
33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய். 
ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய். 
யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல, 
நீ நினைப்பதை எனக்குச் சொல்லு. 
34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான். 
ஒரு ஞானி, 
35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான். 
யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான். 
36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். 
ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான். 
37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான். 
எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான். 
