வந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய நாள் 
2
1 சீயோனில் எக்காளம் ஊதுங்கள். 
என் பரிசுத்தமான மலையின் மேல் எச்சரிக்கை சத்தமிடுங்கள். 
இந்நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களும் பயத்தால் நடுங்கட்டும். 
கர்த்தருடைய சிறப்பான நாள் வந்துகொண்டிருக்கிறது. 
கர்த்தருடைய சிறப்பு நாள் 
அருகில் உள்ளது. 
2 அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். 
அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். 
சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். 
அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். 
இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. 
இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை. 
3 படையானது எரியும் நெருப்பைப் போன்று 
நாட்டை அழிக்கும். 
அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். 
அதற்குப் பிறகு நாடானது 
வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். 
அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது. 
4 வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். 
அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும். 
5 அவைகளுக்குச் செவிகொடுங்கள். 
இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. 
இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. 
அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். 
அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள். 
6 இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். 
அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. 
7 வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். 
வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். 
ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். 
அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள். 
8 அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். 
ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். 
வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் 
மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள். 
9 அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். 
அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். 
அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். 
அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர். 
10 அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. 
சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன. 
11 கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். 
அவரது பாளையம் மிகப்பெரியது. 
அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. 
அப்படை மிகவும் வல்லமையுடையது. 
கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. 
ஒருவரும் இதை நிறுத்த முடியாது. 
கர்த்தர் ஜனங்களிடம் மாறும்படிக் கூறுகிறார் 
12 இது கர்த்தருடைய செய்தி. 
“உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள். 
நீங்கள் தீமை செய்தீர்கள். 
அழுங்கள், உணவு உண்ணவேண்டாம். 
13 உங்கள் ஆடைகளையல்ல, 
இதயத்தைக் கிழியுங்கள்.” 
உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். 
அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர். 
அவர் விரைவாகக் கோபப்படமாட்டார். 
அவரிடம் மிகுந்த அன்பு உண்டு. 
ஒருவேளை அவர் தனது மனதை, 
திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். 
14 யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். 
ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம். 
பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும் 
பானங்களின் காணிக்கைகளும் தரலாம். 
கர்த்தரிடம் ஜெபியுங்கள் 
15 சீயோனில் எக்காளம் ஊதுங்கள். 
சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். 
ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள். 
16 ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். 
சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். 
வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். 
குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். 
தங்களது படுக்கை அறையிலிருந்து 
புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும். 
17 மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், 
கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். 
அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். 
“கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். 
உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். 
மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். 
மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ 
என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.” 
கர்த்தர் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவார் 
18 பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார். 
அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார். 
19 கர்த்தர் தமது ஜனங்களிடம், 
“நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன். 
உங்களுக்கு ஏராளமாக இருக்கும். 
நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன். 
20 இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். 
நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். 
அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். 
அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். 
ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். 
அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!” 
என்று சொன்னார். 
இந்த நாடு மீண்டும் புதிதாக்கப்படும் 
21 தேசமே, பயப்படாதே. 
சந்தோஷமாக இரு. 
முழுமையாகக் களிகூரு. 
கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். 
22 வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம். 
வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும். 
மரங்கள் கனிகளைத் தரும், 
அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும். 
23 எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். 
சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், 
அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். 
அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார். 
24 களங்கள் தானியத்தால் நிரம்பும். 
குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும். 
25 “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன். 
உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும், 
பச்சைக்கிளிகளும் 
முசுக்கட்டைப் பூச்சிகளும், 
பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன. 
ஆனால் கர்த்தராகிய நான், 
அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன். 
26 பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும். 
நீங்கள் நிறைவு அடைவீர்கள். 
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள். 
அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார். 
எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை. 
27 நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். 
நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 
வேறு தேவன் இல்லை. 
எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.” 
அனைத்து ஜனங்களுக்கும் தேவன் தனது ஆவியை கொடுப்பார் 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன். 
உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். 
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். 
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 
29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும் 
என் ஆவியை ஊற்றுவேன். 
30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு, 
அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 
31 சூரியன் இருட்டாக மாற்றப்படும். 
சந்திரன் இரத்தமாக மாற்றப்படும். 
பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 
32 பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” 
சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். 
இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். 
ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள். 
