தேவனுக்கு உங்களையே கொடுங்கள்
4
1 உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா?
2 நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை.
3 மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள்.
4 தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா?
5 அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்”* என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா?
6 ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.”✡
7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான்.
8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள்.
10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
நீங்கள் நியாயாதிபதி அல்ல
11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும்.
12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?
தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்
13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள்.
14 “நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள்.
15 எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள்.
16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும்.
17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.