4
1 “இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா. 
உனது விக்கிரகங்களைத் தூர எறி. 
என்னை விட்டுத் தூரமாக அலையாதே. 
2 நீ அவற்றைச் செய்தால், 
பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய், 
‘கர்த்தர் வாழ்கிறதுபோல’ 
என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய். 
அந்த வார்த்தைகளை உண்மையோடும், 
நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்: 
நீ இவற்றைச் செய்தால், 
பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும். 
அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி, 
மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 
3 எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்: 
“உங்கள் வயல்கள் உழப்படவில்லை, 
அவற்றை உழுங்கள், 
முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள். 
4 கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள். 
உங்கள் இதயங்களை மாற்றுங்கள்! 
யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே! 
நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன். 
எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும். 
எனது கோபம் உங்களை எரித்துப்போடும். 
எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது. 
இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.” 
வடக்கிலிருந்து வரும் அழிவு 
5 “யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள். 
எருசலேம் நகரத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் சொல், 
‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்.’ உரக்கச் சத்தமிட்டு, 
‘ஒன்றுசேர்ந்து வாருங்கள்! நாம் அனைவரும் பாதுகாப்புக்காக உறுதியான நகரங்களுக்குத் தப்புவோம்.’ என்று சொல்லுங்கள். 
6 சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள். 
உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள். 
இதனைச் செய்யுங்கள். 
ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன். 
நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.” 
7 ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது. 
தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான். 
அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான். 
உங்கள் நகரங்கள் அழிக்கப்படும், 
அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான். 
8 எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள். 
சத்தமாய் அழுது புலம்புங்கள். ஏனென்றால், கர்த்தர் நம்மிடம் கோபமாக இருக்கிறார். 
9 கர்த்தர் இவ்வாறு சொல்கிறார், “இது நிகழும் காலத்தில் அரசனும், அவனது அதிகாரிகளும், தம் தைரியத்தை இழப்பார்கள். 
ஆசாரியர்கள் அஞ்சுவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்.” 
10 பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன். 
11 அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும். 
“வறண்ட மலைகளிலிருந்து, 
ஒரு சூடான காற்று வீசுகிறது. 
இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது. 
இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து, 
பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை. 
12 இது அதனைவிட பலமுடையதாக இருக்கிறது. 
இது என்னிடமிருந்து வருகிறது. 
இப்பொழுது, யூதாவின் ஜனங்களுக்கு எதிரான எனது தீர்ப்பை நான் அறிவிப்பேன்.” 
13 பாருங்கள்! பகைவன் மேகத்தைப்போன்று எழும்பியிருக்கிறான். 
அவனது இரதங்கள் புயல் காற்றைப்போன்று தோன்றுகின்றன. 
அவனது குதிரைகள் கழுகுகளைவிட வேகமுடையதாயுள்ளன. 
இது நமக்கு மிகவும் கேடாயிருக்கும். 
நாம் அழிக்கப்படுகிறோம். 
14 எருசலேம் ஜனங்களே, உங்கள் இருதயங்களிலிருந்து, தீமையானவற்றைக் கழுவுங்கள். 
உங்கள், இருதயங்களைச் சுத்தப்படுத்துங்கள். 
அதனால் காப்பாற்றப்படுவீர்கள். 
தீய திட்டங்களைத் தீட்டுவதைத் தொடராதீர்கள். 
15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த 
தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது. 
எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து 
ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான். 
16 “இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள். 
எருசலேமிலுள்ள ஜனங்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புங்கள். 
பகைவர்கள் தூர நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். 
அந்தப் பகைவர்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகப் போர் செய்வதுப்பற்றி 
சத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
17 எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று, 
வளைத்துக்கொண்டனர். 
யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்! 
எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” 
என்று கர்த்தர் சொல்லுகிறார். 
18 “நீங்கள் வாழ்ந்த வழியும் நீங்கள் செய்த செயல்களும், 
உங்களுக்கு இந்தத் தொல்லையைக் கொண்டுவந்துள்ளது, 
உங்களது தீமையானது, உங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியிருக்கிறது. 
உங்கள் தீமை கொடிய ஆபத்தைக் கொண்டுவந்தது. 
இது உங்கள் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது.” 
எரேமியாவின் அழுகை 
19 எனது துக்கமும், கவலையும், எனது வயிற்றைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. 
நான் வலியால் வேதனையடைந்துவிட்டேன். 
நான் மிகவும் பயப்படுகிறேன். 
எனது இதயம் எனக்குள் வேதனைப்படுகிறது. 
என்னால் சும்மா இருக்கமுடியாது, ஏனென்றால் நான் எக்காள சத்தத்தைக் கேட்டிருக்கிறேன், 
எக்காளமானது போருக்காகப் படையை அழைத்துக்கொண்டிருக்கிறது. 
20 அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது. 
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது. 
எனது கூடாரங்கள் திடீரென்று அழிக்கப்படுகின்றன. 
எனது திரைச் சீலைகள் கிழிக்கப்படுகின்றன. 
21 என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்! 
எவ்வளவு காலமாக நான், போர் எக்காளத்தைக் கேட்க வேண்டும்? 
22 தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள். 
அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை. 
அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள். 
அவர்கள் புரிந்துகொள்வதில்லை. 
அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள். 
ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார். 
அழிவு வந்துகொண்டிருக்கிறது 
23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன். 
பூமி வெறுமையாய் இருந்தது. 
பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது. 
நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். 
அதன் ஒளி போய்விட்டது. 
24 நான் மலைகளைப் பார்த்தேன், 
அவை நடுங்கிக்கொண்டிருந்தன. 
மலைகள் எல்லாம் அசைந்தன. 
25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை. 
வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன. 
26 நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது. 
அந்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. 
கர்த்தர் இதனைச் செய்தார். 
கர்த்தரும் அவரது பெருங்கோபமும் தான் இதனைச் செய்தது. 
27 “தேசம் முழுவதும் அழிக்கப்படும் 
(ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்). 
28 எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள். 
வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன். 
அதனை மாற்றமாட்டேன். 
நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன். 
நான் எனது மனதை மாற்றமாட்டேன்” 
என்று கர்த்தர் சொல்லுகிறார். 
29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும் 
வில் வீரர்களின் சத்தத்தையும் கேட்பார்கள். 
ஜனங்கள் ஓடிப்போவார்கள்! 
சில ஜனங்கள் குகைகளுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள். 
சில ஜனங்கள் புதர்களுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள். 
சில ஜனங்கள் பாறைகளுக்கு மேல் ஏறிக்கொள்வார்கள். 
யூதா நகரங்கள் எல்லாம் காலியாகிப் போகும். 
அவற்றில் எவரும் வாழமாட்டார்கள். 
30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய். 
எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 
நீ அழகான சிவப்பு ஆடைகளை, 
ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்? 
நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்? 
நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய். 
நீ உன்னை அழகு செய்கிறாய். 
ஆனால் இது வீணாகும். 
உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர். 
அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர். 
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் குரலைப் போன்ற கதறலைக் கேட்கிறேன். 
அது முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணின் கதறல் போன்றிருந்தது. சீயோனின் மகளின் கதறலாய் இது இருக்கிறது. 
அவள் தனது கைகளை விரித்து, 
“ஓ! நான் எதிர்த்து போரிட முடியாமல், மயங்கி விழப்போகிறேன். 
என்னைச் சுற்றிலும் கொலைக்காரர்கள் இருக்கிறார்கள்!” என்று ஜெபிக்கிறாள். 
