16
பிறகு கர்த்தர் ஆனானியின் மகனான
யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் அரசனாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் மகனான யெரொ பெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.”
பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது மகனான ஏலா அடுத்த அரசனானான்.
எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் மகனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.
இஸ்ரவேலின் அரசனான ஏலா
யூதாவின் அரசனான ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் அரசனானான். பாஷாவின் மகனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.
சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். அரசன் திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. 10 சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் அரசனைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் அரசனாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து அரசனானான்.
இஸ்ரவேலின் அரசனான சிம்ரி
11 சிம்ரி அரசனானதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். 12 இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. 13 இது, பாஷாவும் அவனது மகன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள்.
14 ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
15 யூதாவின் அரசனாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி அரசனானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். 16 சிம்ரி அரசனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் அரசனைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். 17 ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். 18 சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். 19 தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான்.
20 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது.
இஸ்ரவேலின் அரசனான உம்ரி
21 இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் மகனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் அரசனாக்க விரும்பினார்கள். 22 ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி அரசனானான்.
23 யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் அரசனாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.
25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.
27  இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது மகன் ஆகாப் புதிய அரசனானான்.
இஸ்ரவேலின் அரசனான ஆகாப்
29 யூதாவின் அரசனான ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய அரசனானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் அரசனான ஏத்பாகாலின் மகள் யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் அரசனாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.
34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தமகனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய மகன் செகூப் மரித்தான். நூனின் மகனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.