சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்
6
சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது. ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாய் இருந்தது. ஆலயத்தின் முகப்பானது 30 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டது. இது ஆலயத்தின் முக்கிய பகுதியோடு இணைத்திருந்தது. இதன் நீளமானது ஆலயத்தின் அகலத்திற்கு சமமாக இருந்தது. ஆலயத்தில் குறுகிய ஜன்னல்களும் இருந்தன. இவை வெளியே குறுகலாகவும் உட்பகுதியில் பெரிதாகவும் தோற்றமளித்தன. ஆலயத்தின் முக்கியமான பகுதியைச் சுற்றி சாலொமோன் வரிசையாக பல அறைகளைக் கட்டினான். இந்த அறைகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. இவ்வரிசை அறைகளின் உயரமானது மூன்று அடுக்குகளையுடையதாக இருந்தன. இவ்வறைகள் ஆலயத்தின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்தச் சுவர்களுக்குள் உத்திரங்கள் கட்டப்படவில்லை. ஆலயச் சுவரானது உச்சியில் மெல்லியதாக இருந்தது. எனவே அறைகளின் ஒரு பக்க சுவர் மற்ற பக்கங்களைவிட மெல்லியதாக இருந்தது. அறைகளின் அடித்தளமானது 7 1/2 அடி அகலமும், நடுத்தள அறையானது 9 அடி அகலமும் அதற்கு மேலுள்ள அறையானது 10 1/2 அடி அகலமும் கொண்டவை. வேலைக்காரர்கள் சுவர்களைக் கட்டுவதற்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தினார்கள். பூமியில் வெட்டி எடுக்கப்படும் இடத்திலேயே அவர் கள் கற்களை வெட்டி சரிசெய்துவிட்டனர். அதனால் ஆலயம் கட்டும் இடத்தில் சுத்திகள், வாச்சிகள், முதலான எந்த இரும்புக் கருவிகளின் சத்தமும் கேட்கவில்லை.
அடியிலுள்ள அறையின் நுழை வாசலானது ஆலயத்தின் தென்புறத்தில் இருந்தது. உள்ளே படிக்கட்டுகள் அங்கிருந்து இரண்டாவது மாடிக்கும் மூன்றாவது மாடிக்கும் போயின.
இவ்வாறு, சாலொமோன் ஆலயம் கட்டும் வேலையை முடித்தான். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கேதுருமரங்களால் மூடப்பட்டிருந்தது. 10 ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளின் வேலைகளையும் முடித்தான். ஒவ்வொரு அறையும் 7 1/2 அடி உயரமுள்ளவை. அந்த அறைகளில் உள்ள கேதுரு மரத்தூண்கள் ஆலயத்தைத் தொட்டுக் கொண்டிருந்தன.
11 கர்த்தர் சாலொமோனிடம், 12 “நீ எனது அனைத்து சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தால் உன் தந்தை தாவீதிற்கு வாக்களித்தபடி நான் உனக்குச் செய்வேன். 13 நீ கட்டிய இவ்வாலயத்தில் இஸ்ரவேலின் ஜனங்களோடு நான் வாழ்வேன். நான் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு போகமாட்டேன்” என்றார்.
14 இவ்வாறு சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் வேலையை முடித்தான். 15 ஆலயத்தின் உட்புறத்தில் உள்ள கற்சுவர்கள் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அவை தரையிலிருந்து கூரைவரை இருந்தன. கல் தரையானது தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டன. 16 ஆலயத்தின் பின் பகுதியில் 30 அடி நீளத்தில் ஒரு அறையைக் கட்டினார்கள். அதன் சுவர்களைக் கேதுருமரப் பலகைகளால் தரையிலிருந்து கூரைவரை மூடினர். இந்த அறையானது மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. 17 மகா பரிசுத்த இடத்தின் முன்புறத்தில்தான் ஆலயத்தின் முக்கிய இடம் இருந்தது. இந்த அறை 60 அடி நீளம் இருந்தது. 18 அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள்.
19 சாலொமோன் ஒரு அறையை ஆலயத்தின் பின்பகுதியில் உள்ளே கட்டினான். இந்த அறையில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைத்தனர். 20 இது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் உடையதாக இருந்தது. 21 சாலொமோன் இந்த அறையைச் சுத்தமான தங்கத்தால் மூடினான். அவன் நறுமணப்பொருட்களை எரிக்கும் பலிபீடத்தை கட்டினான். அவன் பலிபீடத்தையும் தங்கத் தகடுகளால் மூடி பொன் சங்கிலிகளைக் குறுக்காகத் தொங்கவிட்டான் அந்த அறையில் இரண்டு கேருபீன்களின் உருவங்கள் இருந்தன. அவை தங்கத்தால் மூடப்பட்டவை. 22 ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் தங்கத்தால் மூடப்பட்டன. மகா பரிசுத்த இடத்திற்கு வெளியே உள்ள பலிபீடத்தையும் தங்கத்தால் மூடினார்கள்.
23 வேலைக்காரர்கள் ஒலிவ மரத்தைக் கொண்டு இரண்டு கேருபீன்களின் உருவங்களை செய்தனர்.இவற்றை மகாபரிசுத்த இடத்தில் வைத்தனர். இவற்றின் உயரம் 15 அடி. 24-26 இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன. 27 அவை மகாபரிசுத்த இடத்தில் இரு பக்கங்களிலும் இருந்தன. இரண்டின் சிறகுகளும் அறையின் மத்தியில் தொட்டுக்கொண்டிருந்தன. வெளிநுனிகள் சுவரைத் தொட்டுக்கொண்டிருந்தன. 28 இரு கேருபீன்களும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன.
29 முக்கிய அறையைச் சுற்றியுள்ள சுவர்களிலும் உட்சுவர்களிலும் கேருபீன்களின் உருவங்கள், பேரீச்ச மரங்கள், பூக்கள் என பொறிக்கப்பட்டன. 30 இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.
31 மகா பரிசுத்த இடத்தின் நுழைவாயிலில் ஒலிவ மரத்தால் ஆன இரு கதவுகளைச் செய்து பொருத்தினர். இதன் சட்டமானது ஐந்து பக்கங்களுடையதாக அமைக்கப்பட்டது. 32 இக்கதவுகளின் மேல் கேருபீன்களும், பேரீச்ச மரம், பூக்கள் எனப் பல வடிவங்கள் செதுக்கப்பட்டன. பின்னர் தங்கத்தால் இவற்றை மூடினார்கள்.
33 அவர்கள் முக்கியமான அறையின் நுழைவிற்குக் கதவுகள் செய்தனர். அவர்கள் ஒலிவ மரத்தை பயன்படுத்தி சதுர கதவு சட்டத்தைச் செய்தனர். 34 பிறகு அவர்கள் கதவுகளைச் செய்ய ஊசியிலை மரத்தைப் பயன்படுத்தினார்கள். 35 ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.
36 பிறகு அவர்கள் உட்பிரகாரத்தைக் கட்டினார்கள். அதைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். ஒவ்வொரு சுவரும் மூன்று வரிசை வெட்டப்பட்ட கற்களாலும், ஒரு வரிசை கேதுருமரங்களாலும் செய்யப்பட்டன.
37 ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாகி நான்காவது ஆண்டாக இருந்தது. 38 ஆலயத்தின் வேலையானது ஆண்டின் எட்டாவது மாதமான பூல் மாதத்தில் முடிந்தது. இது சாலொமோன் ஆட்சிக்கு வந்த பதினொன்றாவது ஆண்டாயிற்று. ஆலய வேலை முடிய ஏழு ஆண்டுகள் ஆனது. திட்டமிட்ட விதத்திலேயே ஆலயமானது மிகச்சரியாகக் கட்டப்பட்டது.