ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?
14
1 ஓய்வு நாளில் இயேசு பரிசேயர்களின் தலைவனாகிய ஒருவனின் வீட்டுக்கு அவனோடு உணவு உண்ணச் சென்றார். அங்கிருந்த ஜனங்கள் இயேசுவைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
2 கொடிய நோய்* உள்ள ஒரு மனிதனை இயேசுவின் முன்னே கொண்டு வந்தார்கள்.
3 இயேசு பரிசேயரிடமும், வேதபாரகரிடமும், “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா அல்லது தவறா?” என்று கேட்டார்.
4 ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.
5 பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.
6 இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.
சுயமுக்கியத்துவம் வேண்டாம்
7 விருந்தினர்களில் சிலர் மதிப்புக்குரிய உயர்ந்த இடத்தில் அமருவதற்காக தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பதை இயேசு கவனித்தார். எனவே இயேசு இவ்வுவமையைச் சொன்னார்.
8 “ஒருவன் உங்களை ஒரு திருமணத்திற்காக அழைக்கும்போது, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள். அந்த மனிதன் உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் ஒருவரை அழைத்திருக்கக் கூடும்.
9 நீங்கள் முக்கியமான இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கையில் உங்கள் இருவரையும் அழைத்த மனிதன் வந்து, ‘உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்’ என்று கூறக்கூடும். எனவே கடைசி இடத்தை நோக்கி, நீங்கள் செல்லக் கூடும். உங்களுக்கு அது அவமானமாக இருக்கும்.
10 “எனவே ஒருவன் உங்களை அழைக்கும்போது முக்கியமற்ற இடத்தில் உட்காருங்கள். அப்போது உங்களை அழைத்த மனிதன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, இன்னும் முக்கியமான இருக்கையில் வந்து அமருங்கள்’ என்பான். அப்போது மற்ற எல்லா விருந்தினர்களும் உங்களை மதிப்பார்கள்.
11 தன்னை முக்கியமாகக் கருதும் எந்த மனிதனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்திக்கொள்கிற மனிதன் உயர்வாக வைக்கப்படுவான்” என்றார்.
நீ பலன் பெறுவாய்
12 பின்பு இயேசு தன்னை அழைத்த பரிசேயனை நோக்கி, “நீ பகலுணவோ, இரவுணவோ அளிக்கையில், உன் நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், செல்வந்தர்களாகிய அக்கம் பக்கத்தார் ஆகியோரை மட்டும் அழைக்காதே. மற்றொரு முறை அவர்கள் உன்னைத் தம்மோடு உண்ணுவதற்காக அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு உன் பலன் கிடைத்துவிடும்.
13 அதற்கு மாறாக, நீ விருந்தளிக்கும் போது, ஏழைகளையும், முடமானவர்களையும், நொண்டிகளையும், குருடர்களையும் அழைத்துக்கொள்.
14 அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்றார்.
பெரிய விருந்தின் உவமை
(மத் 22:1-10)
15 இயேசுவுடன் மேசையருகே உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் இவற்றைக் கேட்டான். அவன் இயேசுவிடம், “தேவனின் இராஜ்யத்தில் உணவை அருந்தும் மக்கள் மிகுந்த சந்தோஷமாக இருப்பார்கள்” என்றான்.
16 இயேசு அவனை நோக்கி, “ஒரு மனிதன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான். பலரையும் அவ்விருந்துக்கு அழைத்தான்.
17 சாப்பிடும் வேளை நெருங்கியதும் அவன் வேலைக்காரனை விருந்தினர்களிடம் அனுப்பி, ‘வாருங்கள்! உணவு தயாராக இருக்கிறது’ என்று சொல்லுமாறு அனுப்பினான்.
18 ஆனால் அந்த விருந்தினர்கள் எல்லாம் தம்மால் வர இயலாது எனச் சொல்லி அனுப்பினார்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சாக்குப்போக்கு கூறினார்கள். முதலாமவன், ‘நான் ஒரு வயலை வாங்கியுள்ளேன். அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்’ என்றான்.
19 இன்னொருவன், ‘ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அவைகளை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்’ என்றான்.
20 மூன்றாமவன், ‘எனக்கு இப்பொழுதுதான் திருமணமாயிற்று. நான் வர முடியாது’ என்றான்.
21 “எனவே வேலைக்காரன் திரும்பி வந்தான். நடந்தவற்றை எஜமானருக்குக் கூறினான். எஜமானர் சினந்து, தன் வேலைக்காரனிடம், ‘விரைந்து செல். தெருக்களிலும், ஊரின் ஒதுக்குப் புறங்களிலும் இருக்கிற ஏழைகளையும், அங்கவீனர்களையும், குருடரையும், முடவர்களையும் அழைத்து வா’ என்றான்.
22 “பின்னர் வேலைக்காரன் அவனிடம் வந்து, ‘எஜமானரே, நீங்கள் கூறியபடியே நான் செய்தேன். ஆனால் இன்னும் அதிக மக்களுக்கு இடமிருக்கிறது’ என்றான்.
23 எஜமானன் வேலைக்காரனை நோக்கி, ‘பெரும் பாதைகள் அருகேயும் கிராமப்புறத்திற்கும் செல். அங்குள்ள மக்களை வருமாறு சொல். எனது வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினான்.
24 மேலும் ‘நான் முதலில் அழைத்தவர்களில் ஒருவர் கூட என்னோடு விருந்துண்ணப் போவதில்லை’ என்றான்” எனக் கூறினார்.
முதலில் திட்டமிடுங்கள்
(மத் 10:37-38)
25 இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி,
26 “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்!
27 ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது.
28 “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
29 அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள்.
30 அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள்.
31 “ஓர் அரசன் மற்றோர் அரசனுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். அரசனிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான்.
32 அவனால் மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த அரசனிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.
33 “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!”
உப்பின் உதாரணம்
(மத் 5:13; மாற் 9:50 )
34 “உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது.
35 மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள்.
“என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.