ஆசாரியர்களுக்கான விதிகள்
21
1 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது.
2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது தாய் அல்லது தந்தை, மகன் அல்லது மகள், சகோதரன் அல்லது
3 திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம்.
4 ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
5 “ஆசாரியர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடியின் ஓரங்களை மழிக்கவோ கூடாது. தங்கள் உடலில் வெட்டி எவ்வித அடையாளக் குறிகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6 இவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இவர்கள் தேவனின் பெயருக்கு மரியாதை செலுத்த வேண்டும், ஏனென்றால் இவர்கள் கர்த்தரின் தகன பலியையும் அப்பத்தையும் செலுத்துகிறவர்கள். எனவே, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
7 “விசேஷ வழியில் ஒரு ஆசாரியன் தேவனுக்குச் சேவை செய்கிறான். எனவே அவர்கள் வேசியையோ, கற்ப்பிழந்தவளையோ திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது. கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.
8 ஒரு ஆசாரியன் தேவனுக்கு விசேஷ வழியில் சேவை செய்கிறான். ஆகையால் நீங்கள் அவனை விசேஷமாக நடத்த வேண்டும். ஏனென்றால் அவன் பரிசுத்தமான பொருட்களை ஏந்திச் செல்பவன். பரிசுத்தமான அப்பத்தைக் கர்த்தருக்கு எடுத்து வருபவன். நான் பரிசுத்தமானவர்! நானே கர்த்தர். நான் உன்னையும் பரிசுத்தப்படுத்துவேன்.
9 “ஒரு ஆசாரியனின் மகள் வேசியானால் அவள் தனது பரிசுத்தத்தைக் குலைத்துகொள்வதுடன், தன் தந்தைக்கும் அவமானத்தைத் தேடித்தருகிறாள். அவளைச் சுட்டெரிக்க வேண்டும்.
10 “தலைமை ஆசாரியன் தன் சகோதரர்களுக்கிடையில் இருந்து தலைமை சிறப்பு பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவன், சிறப்பான உடைகளை அணிவதற்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அவன் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கும். அவன் தனது துன்பங்களைப் பொது ஜனங்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது. அவன் தன் தலை முடியை அதிகமாக வளரும்படிவிடவோ, தன் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.
11 அவன் பிணத்தைத் தொட்டு தன்னைத் தீட்டுப் பண்ணிக்கொள்ளக் கூடாது. மரித்து போனது அவனது தாயாகவோ தந்தையாகவோ இருந்தாலும் பிணத்தின் அருகில் போகக்கூடாது.
12 தலைமை ஆசாரியன் தேவனின் பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போகக் கூடாது. அவன் அதனால் தீட்டாவதுடன், தேவனின் பரிசுத்தமான இடத்தையும் தீட்டாக்கிவிடுகிறான். அபிஷேக எண்ணெயானது தலைமை ஆசாரியனின் தலைமீது ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இது அவனை மற்றவர்களிடமிருந்து தனியே பிரித்துக் காட்டும். நானே கர்த்தர்!
13 “கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும்.
14 விபச்சாரியான பெண்ணையோ, வேசியையோ, விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ மணந்துகொள்ளக் கூடாது. அவன் தன் சொந்த ஜனங்களிடமிருந்து ஒரு கன்னியான பெண்ணை மணந்துகொள்ள வேண்டும்.
15 அப்பொழுது அவனது பிள்ளைகளை ஜனங்கள் மதிப்பார்கள்.* கர்த்தராகிய நான் தலைமை ஆசாரியனை அவனது சிறப்புப் பணிகளுக்காகத் தனியாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
16 கர்த்தர் மோசேயிடம்,
17 “ஆரோனிடம் சொல்! உனது சந்ததியில் எவராவது அங்கக் குறைவுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் தேவனுக்கு சிறப்பு அப்பத்தை எடுத்துச் செல்ல தகுதியற்றவர்களாகிறார்கள்.
18 உடல் உறுப்புகளிலே குறைவுள்ள யாரும் ஆசாரியனாகப் பணிச்செய்யக் கூடாது. எனக்குப் பலிசெலுத்தும் பொருள்களையும் கொண்டுவரக்கூடாது. குருடர், சப்பாணி, முகத்திலே வெட்டுக்காயங்கள் உள்ளவர்கள், கைகளும் கால்களும் அதிக நீளமாய் இருக்கிறவர்கள்,
19 உடைந்த கைகளும், கால்களும் உடையவர்கள்,
20 கூனர்கள், குள்ளர்கள், பூ விழுந்த கண்ணுள்ளவர்கள், சொறியர்கள், அசறு உள்ளவர்கள், விதை நசுங்கினவர்கள் ஆகியோர் ஆசாரியனாகத் தகுதியில்லாதவர்கள்.
21 “ஆரோனின் சந்ததியில் எவராவது இத்தகைய உடல்குறை உடையவர்களாக இருந்தால் அவர்கள் கர்த்தருக்கு எந்த பலிகளையும் கொடுக்க தகுதியற்றுப் போகிறார்கள். அவன் தேவனுக்கு சிறப்பான அப்பத்தை எடுத்துச் செல்ல முடியாது.
22 அவன் ஆசாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதினால் பரிசுத்தமான அப்பத்தையும், மிகப்பரிசுத்தமான அப்பங்களையும் அவன் உண்ணலாம்.
23 ஆனால் அவன் மிகவும் பரிசுத்தமான இடத்துக்குத் திரையைக் கடந்து போகமுடியாது. பலிபீடத்தின் அருகிலும் செல்ல முடியாது. ஏனென்றால் அவனிடம் குறையுள்ளது. அவன் எனது பரிசுத்தமான இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. கர்த்தராகிய நான் அந்த இடங்களை பரிசுத்தப்படுத்துகிறேன்!” என்று கூறினார்.
24 ஆகவே இவ்விதிமுறைகள் அனைத்தையும் ஆரோனுக்கும், ஆரோனின் பிள்ளைகளுக்கும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மோசே சொன்னான்.