108
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று 
1 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். 
எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது. 
2 சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம். 
3 கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். 
பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம். 
4 கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. 
உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. 
5 தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்! 
உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும். 
6 தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும். 
எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும். 
7 தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, 
“நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! 
என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன். 
அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். 
அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன் 
8 கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். 
எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். 
யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல் 
9 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். 
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. 
நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.” 
10-11 யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்? 
யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்? 
தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும். 
ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர். 
நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை! 
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! 
ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது! 
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். 
தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார். 
