118
1 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள். 
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்! 
2 இஸ்ரவேலே, இதைக்கூறு, 
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” 
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்: 
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” 
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்: 
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!” 
5 நான் தொல்லையில் உழன்றேன். 
எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டேன். 
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார். 
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். 
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது. 
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர். 
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன். 
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் 
கர்த்தரை நம்புவது நல்லது. 
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும் 
கர்த்தரை நம்புவது நல்லது. 
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், 
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன். 
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள். 
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன். 
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். 
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள். 
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன். 
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர். 
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார். 
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். 
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்! 
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும். 
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார். 
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன. 
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார். 
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன். 
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன். 
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார், 
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார். 
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள், 
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன். 
20 அவை கர்த்தருடைய கதவுகள், 
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும். 
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். 
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். 
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய 
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று. 
23 கர்த்தரே இதைச் செய்தார், 
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம். 
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள். 
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்! 
25  ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்! 
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்! 
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். 
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக் 
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்! 
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார். 
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள். 
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன். 
நான் உம்மைத் துதிக்கிறேன். 
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். 
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும். 
