126
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
1 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது 
அது ஒரு கனவைப் போன்றிருக்கும். 
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் 
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள், 
“இஸ்ரவேலின் ஜனங்களுக்குக் கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள். 
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால் 
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். 
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின் 
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும். 
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம். 
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான். 
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும், 
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான். 
