129
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
1 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். 
இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல். 
2 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர். 
ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை. 
3 என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள். 
எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன. 
4 ஆனால் நல்லவராகியக் கர்த்தர் கயிறுகளை அறுத்துக் 
கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார். 
5 சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். 
அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள். 
6 அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள். 
வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும். 
7 ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது. 
ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை. 
8 அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள். 
ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள். 
