138
தாவீதின் ஒரு பாடல் 
1 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். 
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன். 
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். 
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மை யையும் துதிப்பேன். 
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர். 
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். 
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர். 
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது 
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள். 
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். 
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது. 
6 தேவன் மிக முக்கியமானவர். 
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படு கிறார். 
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார். 
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். 
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். 
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். 
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்! 
