31
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல் 
1 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். 
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும். 
2 தேவனே, எனக்குச் செவிகொடும். 
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும். 
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும். 
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும். 
3 தேவனே, நீரே என் பாறை. 
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும். 
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள். 
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர். 
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே. 
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்! 
6 பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன். 
கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன். 
7 தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது. 
நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர். 
என் தொல்லைகளை நீர் அறிகிறீர். 
8 எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர். 
அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும். 
9 கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும். 
என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன. 
என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன. 
10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது. 
பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது. 
என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன. 
என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது. 
11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள். 
என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள். 
என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள். 
அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள். 
12 காணாமற்போன கருவியைப் போலானேன். 
ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள். 
13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன். 
அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். 
அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். 
14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். 
நீரே என் தேவன். 
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது. 
என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள். 
அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். 
என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்! 
17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன். 
எனவே நான் ஏமாந்து போகமாட்டேன். 
தீயோர் ஏமாந்து போவார்கள். 
அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள். 
18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள். 
அத்தீயோர் பெருமைக்காரர். 
ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும். 
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர். 
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர். 
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள். 
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள். 
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும். 
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும். 
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார். 
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன். 
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன். 
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர். 
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள். 
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார். 
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார். 
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார். 
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, 
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்! 
