38
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல். 
1 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும். 
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும். 
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர். 
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன. 
3 நீர் என்னைத் தண்டித்தீர். 
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன. 
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர். 
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன. 
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன். 
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன. 
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். 
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன. 
6 நான் குனிந்து வளைந்தேன். 
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன். 
7 காய்ச்சலினாலும் வலியினாலும் 
என் உடல் முழுவதும் துன்புறுகிறது. 
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன். 
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன். 
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர். 
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை. 
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது. 
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று. 
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. 
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை. 
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள். 
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள். 
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள். 
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன். 
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன். 
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன். 
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை. 
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும். 
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும். 
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள். 
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள். 
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள். 
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். 
என் நோவை என்னால் மறக்க இயலாது. 
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன். 
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன். 
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள். 
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள். 
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர். 
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன். 
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள். 
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். 
என் தேவனே, என் அருகே தங்கியிரும். 
22 விரைந்து வந்து எனக்கு உதவும்! 
என் தேவனே, என்னை மீட்டருளும். 
