6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 
1 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். 
என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும். 
2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். 
என்னைக் குணமாக்கும்! 
என் எலும்புகள் நடுங்குகின்றன. 
3 என் முழு உடம்பும் நடுங்குகிறது. 
கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்? 
4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். 
நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும். 
5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். 
மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். 
எனவே என்னை நீர் குணமாக்கும்! 
6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். 
என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. 
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. 
உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன். 
7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். 
வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. 
தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன. 
8 தீயோரே அகன்று போங்கள்! 
ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். 
9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். 
கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார். 
10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். 
ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள். 
