77
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று 
1 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன். 
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். 
நான் சொல்வதைக் கேளும். 
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன். 
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன். 
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது. 
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன், 
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை. 
4 நீர் என்னை உறங்கவொட்டீர். 
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன். 
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். 
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். 
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். 
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன். 
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா? 
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா? 
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா? 
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா? 
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா? 
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன். 
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது. 
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன். 
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். 
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன். 
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன். 
அக்காரியங்களை நான் நினைத்தேன். 
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. 
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை. 
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே. 
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர். 
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர். 
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர். 
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது. 
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று. 
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன. 
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள். 
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன. 
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின. 
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று. 
பூமி அதிர்ந்து நடுங்கிற்று. 
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர். 
நீர் ஆழமான கடலைக் கடந்தீர். 
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை. 
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு 
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர். 
