86
தாவீதின் விண்ணப்பம் 
1 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். 
கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும். 
2 கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன். 
தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள். 
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன். 
எனவே என்னைக் காப்பாற்றும். 
3 என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும். 
நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். 
4 ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். 
என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள். 
5 ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். 
உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். 
நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர். 
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். 
இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும். 
7 கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். 
நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன். 
8 தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. 
நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது. 
9 ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர். 
அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். 
10 தேவனே, நீர் மேன்மையானவர்! 
நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர். 
நீரே, நீர் மட்டுமே தேவன்! 
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும். 
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன். 
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே 
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும். 
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். 
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன். 
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். 
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும். 
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள். 
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது. 
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை. 
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன். 
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர். 
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். 
நான் உமது பணியாள். 
எனக்குப் பெலனைத் தாரும். 
நான் உமது பணியாள். 
என்னைக் காப்பாற்றும். 
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும். 
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள். 
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும். 
