யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்
1
1 இது இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தின விசேஷம்.* விரைவில் நடைபெறப் போகிறவை எவையென்று தன் ஊழியர்களுக்குத் தெரிவிக்கும்பொருட்டு இயேசுவுக்கு தேவன் இதை வழங்கினார். கிறிஸ்து தன் தேவதூதனை அனுப்பி தன் ஊழியனாகிய யோவான் இதனைத் தெரிந்துகொள்ளுமாறு செய்தார்.
2 தான் பார்த்த எல்லாவற்றையும் யோவான் சொல்லி இருக்கிறான். தேவனிடமிருந்து வருகிற செய்தியாகிய இவ்வுண்மையையே இயேசு அவனிடம் சொன்னார்.
3 தேவனிடமிருந்து வந்த இச்செய்திகளை வாசிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். இச்செய்தியைக் கேள்விப்படுகிறவர்களும் இதில் எழுதியுள்ளபடி நடக்கின்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் குறுகினதாயிருக்கிறது.
இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்
4 ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:
எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
5 இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.
பூமியில் உள்ள அரசர்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு.
6 இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.
7 பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.
8 கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய்† இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”
9 நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு‡ என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன்.
10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது.
11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.
12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன்.
13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது.
14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன.
15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது.
16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.
17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன்.
18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன.
19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது.
20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.
* 1:1: வெளிப்படுத்தின விசேஷம் மறைவாகப் பொதிந்துள்ள உண்மையை வெளிப்படுத்துவதும், புரிய வைப்பதுமான காரியம்.
† 1:8: அல்பா, ஒமேகா இவை கிரேக்கத்தின் முதலும் முடிவுமான எழுத்துக்கள். இது ஆரம்பத்தையும் முடிவையும் காட்டும்.
‡ 1:9: பத்மூ ஏஜீயன் கடலில் உள்ள சிறிய தீவு. ஆசியா மைனர் கடற்கரை அருகில் உள்ளது (தற்கால துருக்கி).