தாவீதும், நாபால் எனும் முட்டாளும்
25
1 சாமுவேல் மரித்தான். அவனது மரணத்திற்காக அனைத்து இஸ்ரவேலர்களும் கூடித் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ராமாவில் உள்ள வீட்டில் அவனை அடக்கம் செய்தனர்.
பின் பாரான் பாலைவனத்துக்கு தாவீது போனான்.
2 மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான்.
3 இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.
4 பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான்.
5 அவனோடு பேச, தாவீது 10 இளைஞர்களை அனுப்பினான். அவர்களிடம், “கர்மேலுக்குப் போங்கள், நாபாலைக் கண்டு எனக்காக வாழ்த்துச் சொல்லுங்கள்” என்றான்.
6 தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், “நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன்.
7 நீ மயிர் கத்தரிப்பதாக அறிந்தேன். கொஞ்ச நேரம் உனது மேய்ப்பர்கள் எங்களோடு இருக்கையில், அவர்களுக்கு நாங்கள் தீங்கு செய்யவில்லை. அவர்கள் கர்மேலில் இருக்கும்வரை அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை.
8 உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன்* தாவீதிற்காகவும் செய்” என்றான்.
9 தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள்.
10 ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், “தாவீது யார்? இந்த ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்!
11 என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான்.
12 தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள்.
13 அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள்.
அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்
14 நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான்.
15 அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை!
16 இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள்.
17 இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது” என்றான்.
18 இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள்.
19 பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
20 அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.
21 தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான்.
22 நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்” என்று சொல்லியிருந்தான்.
23 அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள்.
24 அபிகாயில் அவன் காலில் விழுந்து, “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள்.
25 நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். அவன் தன் பெயரைப் போலவே அறிவீனனாக இருக்கிறான்.
26 அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன்.
27 இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள்.
28 நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல அரசர்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள்.
29 எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்!
30 உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார்.
31 அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
32 தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று.
33 உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய்.
34 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான்.
35 பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.
நாபாலின் மரணம்
36 அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு அரசனைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை.
37 மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது!
38 பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
39 நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான்.
பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான்.
40 தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள்.
41 அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள்.
42 அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள்.
43 யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள்.
44 தாவீது ஏற்கெனவே சவுலின் மகளான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் மகனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.