அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்
15
1 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர்.
2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே* நின்று, நியாயத்திற்காக தாவீது அரசனிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான்.
3 அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது அரசன் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.
4 அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.
5 எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான்.
6 தாவீது அரசனிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.
தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்
7 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு† அப்சலோம் அரசன் தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன்.
8 ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.
9 தாவீது அரசன், “சமாதானமாகப் போ” என்றான்.
அப்சலோம் எப்ரோனுக்குப் போனான்.
10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் அரசன் ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.
11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான்
13 ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.
14 அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான் அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.
15 அரசனின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்
16 தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான்.
17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர அரசன் வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள்.
18 தன் அதிகாரிகள் எல்லோரும் அரசன் அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.
19 அப்போது அரசன் கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய அரசனோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல.
20 நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.
21 ஆனால் ஈத்தாய் அரசனுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.
22 தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான்.
எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள்.
23 எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது அரசனும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள்.
24 சாதோக்கும் லேவியரும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்றார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கீழே வைத்தார்கள். எருசலேமை விட்டு எல்லா ஜனங்களும் வெளியேறும் வரைக்கும் அபியத்தார் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.
25 தாவீது அரசன் சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார்.
26 கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்” என்றான்.
27 அரசன் ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் மகனாகிய அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ.
28 ஜனங்கள் பாலைவனத்திற்குள் கடந்து செல்லும் இடங்களில் நான் காத்திருப்பேன். உங்களிடமிருந்து செய்தி எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” என்றான்.
29 எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.
அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம்
30 தாவீது ஒலிவமலைக்குப் போனான். அழுதுக் கொண்டிருந்தான். அவன் தலையை மூடிக்கொண்டு, கால்களில் மிதியடி இல்லாமல் நடந்தான். தாவீதோடிருந்த எல்லா ஜனங்களும் அவர்களுடைய தலைகளை மூடிக்கொண்டனர். அவர்கள் அழுதபடியே, தாவீதோடு சென்றனர்.
31 ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான்.
32 தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.
33 தாவீது ஊசாய்க்கு, “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய்.
34 ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘அரசனே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு.
35 ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும்.
36 சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.
37 தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.