தாவீது தனது ஆட்களுடன் எப்ரோனுக்குச் செல்வது
2
1 பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான்.
கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார்.
2 எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்)
3 தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள்.
தாவீது யாபேசின் ஜனங்களுக்கு நன்றி கூறுவது
4 யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் அரசனாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர்.
5 கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப்* புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
6 கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.
7 இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய அரசனாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான்.
இஸ்போசேத் அரசனாவது
8 சவுலின் படைக்கு நேர் என்பவனின் மகனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை
9 கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் அரசனாக்கினான்.
10 இஸ்போசேத் சவுலின் மகன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர்.
11 தாவீதும் எப்ரோனில் அரசனாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான்.
ஆபத்தான போட்டி
12 நேரின் மகனாகிய அப்னேரும் சவுலின் மகனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர்.
13 செருயாவின் மகனாகிய யோவாபும், தாவீதின் அதிகாரிகளும் சேர்ந்து கிபியோனுக்குச் சென்றனர். கிபியோனின் குளத்தருகே அவர்கள் அப்னேரையும் இஸ்போசேத்தின் அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்னேரின் கூட்டத்தினர் குளத்தின் ஒரு கரையிலும், யோவாபின் கூட்டத்தார் குளத்தின் மறுகரையிலும் அமர்ந்தனர்.
14 அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான்.
யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான்.
15 எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
16 ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம் “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது.
17 பின் அந்தச் சண்டைபெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர்.
அப்னேர் ஆசகேலைக் கொல்வது
18 செருயாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல் ஆகியோராவார்கள். ஆசகேல் மிக வேகமாக ஓடக்கூடியவன். காட்டுமானைப் போன்ற வேகமுள்ளவன்.
19 ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான்.
20 அப்னேர் திரும்பி பார்த்து “நீ ஆசகேலா?” எனக் கேட்டான்.
ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான்.
21 அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.
22 அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், “என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது” என்றான்.
23 ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான்.
யோவாபும் அபிசாயும் அப்னேரைத் துரத்துதல்
ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர்.
24 ஆனால் யோவாபும், அபிசாயும்† அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது)
25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.
26 அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, “நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்” என்றான்.
27 அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான்.
28 எனவே, யோவாப் ஒரு எக்காளத்தை ஊதி, தனது ஆட்கள் இஸ்ரவேலரைக் துரத்தாதபடி தடுத்து நிறுத்தினான். அவர்கள் இஸ்ரவேலரோடு போரிட முயலவில்லை.
29 அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர்.
30 அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான்.
31 ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர்.
32 தாவீதின் அதிகாரிகள் ஆசகேலை எடுத்துச் சென்று பெத்லகேமிலிருந்த அவனது தந்தையின் கல்லறையில் புதைத்தனர்.
யோவாபும், அவனது மனிதர்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் எப்ரோனை அடைந்தபோது சூரியன் உதித்தது.