இயேசுவைக் கொல்லத் திட்டமிடுதல்
(மத் 26:1-5; லூ 22:1-2; யோவான் 11:45-53)
14
1 புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர்.
2 “பண்டிகையின்போது இயேசுவைக் கைது செய்ய முடியாது. மக்களுக்குக் கோபத்தை உருவாக்கி கலகம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
ஒரு பெண்ணின் சிறப்புச் செயல்
(மத் 26:6-13; யோவான் 12:1-8)
3 இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம்* என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள்.
4 சில சீஷர்கள் இதனைக் கவனித்தனர். இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுக்குள் குற்றம் சாட்டினர். “நறுமணத் தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்?
5 ஓராண்டு செலவுக்குரிய பணத்துக்குச் சமமான மதிப்புள்ளதாயிற்றே இத்தைலம். அதனை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குச் செலவு செய்யலாமே” என்று கூறிக்கொண்டனர். அப்பெண்ணையும் அவர்கள் பலமாக விமர்சித்தனர்.
6 இயேசுவோ, “அந்தப் பெண்ணை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கிறீர்கள்? அவள் எனக்காக ஒரு நல்ல செயலைச் செய்தாள்.
7 ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நீங்கள் விரும்பும்போது எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களோடு இருக்கமாட்டேன்.
8 இந்தப் பெண்ணால் செய்ய முடிந்ததைத்தான் அவள் எனக்காகச் செய்திருக்கிறாள். நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு உதவியாக என் உடலில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.
9 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார்.
யூதாஸின் சதித்திட்டம்
(மத் 26:14-16; லூ 22:3-6)
10 பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான்.
11 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
பஸ்கா விருந்து
(மத் 16:17-25; லூ 22:7-14, 21-23; யோவான் 13:21-30)
12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகையின் முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.
13 இயேசு நகரத்துக்குள் இரண்டு சீஷர்களை அனுப்பினார். “நகரத்துக்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்துகொண்டுவரும் ஒருவனைக் காண்பீர்கள். அவன் உங்களிடம் வருவான். அவனைப் பின் தொடர்ந்து செல்லுங்கள்.
14 அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள்.
15 அவன் மாடியில் உள்ள ஒரு பெரிய அறையைக் காட்டுவான். அந்த அறை உங்களுக்கு தயாராக இருக்கும். அங்கு விருந்து தயாராக்குங்கள்” என்றார்.
16 ஆகையால் சீஷர்கள் அவ்விடத்தை விட்டு நகரத்துக்குச் சென்றனர். இயேசு சொன்னபடி எல்லாக் காரியங்களும் நிறைவேறின. எனவே, சீஷர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தனர்.
17 மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார்.
18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.
19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.
20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான்.
21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.
கர்த்தரின் விருந்து
(மத் 26:26-30; லூ 22:15-20 1 கொரி. 11:23-25)
22 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.
23 பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர்.
24 பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது.
25 உங்களுக்கு நான் உண்மையைக் கூறுகிறேன், தேவனுடைய இராஜ்யத்தில் நான் புதிய திராட்சை இரசத்தைக் குடிக்கும் நாள்வரை இனி இங்கு மறுபடியும் திராட்சை இரசத்தைக் குடிக்கமாட்டேன்” என்றார்.
26 அவர்கள் பாடலைப் பாடினர். பிறகு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றனர்.
சீஷர்கள் இயேசுவைவிட்டு விலகுதல்
(மத் 26:31-35; லூ 22:31-34; யோவான் 13:36-38)
27 பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது:
“‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
ஆடுகள் சிதறி ஓடும்.’ சகரியா 13:7
28 ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.
29 பேதுரு, “மற்ற சீஷர்கள் வேண்டுமானால் தங்கள் விசுவாசத்தை இழந்து போகாலாம். ஆனால் நான் எப்பொழுதும் விசுவாசம் இழக்கமாட்டேன்” என்றான்.
30 இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.
31 ஆனால் பேதுருவோ “உங்களைத் தெரியாது என்று நான் நிச்சயமாகச் சொல்லமாட்டேன். நான் என் உயிரைக்கூட உம்மோடு விடுவேன்” என்றான். உறுதியாக எல்லாரும் அவ்வாறே சொன்னார்கள்.
இயேசுவின் பிரார்த்தனை
(மத் 26:36-46; லூ 22:39-46)
32 இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார்.
33 இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார்.
34 “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.
35 இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார்.
36 “பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார்.
37 பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா?
38 நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.
39 மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்.
40 பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.
41 மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது.
42 எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார்.
இயேசு கைதாகுதல்
(மத் 26:47-56; லூ 22:47-53; யோவான் 18:3-12)
43 இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே யூதாஸ் அங்கே வந்தான். அவன் பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன். அவனோடு பலர் வந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியர்களாலும், வேதபாரகராலும், மூத்த யூதத்தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர். அவர்களிடம் வாள்களும், தடிகளும் இருந்தன.
44 யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான்.
45 அவன் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான்.
46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர்.
47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.
48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள்.
49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார்.
50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.
51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள்.
52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான்.
யூதத் தலைவர்களின் முன் இயேசு
(மத் 26:57-68; லூ 22:54-55, 63-71; யோவான் 18:13-14, 19-24)
53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர்.
54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.
55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.
57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர்.
58 “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.
59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.
60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான்.
61 ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை.
தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.
62 இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார்.
63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை.
64 தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர்.
65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.
பேதுருவின் மறுதலிப்பு
(மத் 26:69-75; லூ 22:56-62; யோவான் 18:15-18, 25-27)
66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள்.
67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள்.
“நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.
68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.
69 மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள்.
70 பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான்.
கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர்.
71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.