பிலாத்துவின் விசாரணை
(மத் 27:1-2, 11-14; லூ 23:1-5; யோவான் 18:28-38)
15
1 அதிகாலையில் தலைமை ஆசாரியர்கள், யூதத் தலைவர்கள், வேதபாரகர்கள் அனைவரும் கூடி இயேசுவை என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்தனர். அவரைக் கட்டி ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். அவர்கள் இயேசுவைப் பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.
2 “நீ யூதர்களின் மன்னனா?” என்று பிலாத்து கேட்டான்.
அதற்கு இயேசு, “ஆமாம். நீர் சொல்வது சரிதான்” என்றார்.
3 தலைமை ஆசாரியர் இயேசுவின்மீது பல குற்றங்களைச் சுமத்தினர்.
4 பிலாத்து இயேசுவிடம், “இம்மக்கள் உனக்கு எதிராகக் குற்றங்களை சுமத்துவதை நீ அறிவாய். எனினும் நீ ஏன் எந்தப் பதிலும் சொல்லவில்லை?” என்று மீண்டும் கேட்டான்.
5 ஆனால் இயேசு இதுவரை எந்தப் பதிலையும் கூற வில்லை. இதைப்பற்றி பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.
இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து முயன்று தோற்பது
(மத் 27:15-31; லூ 23:13-25; யோவான் 18:39-19:16)
6 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும்.
7 அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
8 வழக்கத்தின்படி ஒருவனை விடுதலை செய்யும்படி மக்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர்.
9 மக்களிடம் பிலாத்து, “யூதர்களின் மன்னனை விடுதலைசெய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
10 பொறாமை காரணமாகத்தான் தலைமை ஆசாரியர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கின்றனர் என்பதைப் பிலாத்து அறிந்திருந்தான்.
11 தலைமை ஆசாரியர்கள் இயேசுவை விடுதலை செய்யவேண்டாம் என்றும் பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்றும் கேட்க மக்களைத் தூண்டிவிட்டனர்.
12 “அப்படியானால் யூதர்களின் மன்னனாகிய இந்த மனிதனை நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று பிலாத்து மக்களிடம் கேட்டான்.
13 “அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று அவர்கள் மீண்டும் சத்தமிட்டனர்.
14 “ஏன்? இவன் என்ன பாவம் செய்தான்” என்று பிலாத்து கேட்டான். ஆனால் மக்கள் மேலும் மேலும் சப்தமிட்டனர். “அவனைச் சிலுவையில் கொல்லுங்கள்” என்றனர்.
15 மக்களைப் பிரியப்படுத்த, பிலாத்து விரும்பினான். எனவே பரபாசை விடுதலை செய்தான். இயேசுவைச் சவுக்கால் அடிக்கும்படி வீரர்களிடம் சொன்னான். பின்னர் அவரைச் சிலுவையில் அறையும்படி வீரர்களிடம் ஒப்படைத்தான்.
16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர்.
17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர்.
18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள்.
19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். முழங்காலிட்டு அவரை வணங்குவதைப்போல நடித்துக் கிண்டல் செய்தார்கள்.
20 எல்லாம் முடிந்த பிறகு சிவப்பு மேலங்கியைக் கழற்றி விட்டு அவரது சொந்த ஆடையை அணிவித்தனர். அவரைச் சிலுவையில் அறைவதற்காக அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்
(மத் 27:32-44; லூ 23:26-39; யோவான் 19:17-19)
21 சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர்.
22 “கொல்கொதா” என்ற இடத்துக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். (“கொல்கொதா” என்றால் மண்டை ஓடுகளின் இடம் என்று பொருள்)
23 அங்கே இயேசுவுக்குத் திராட்சை இரசத்தைக் கொடுக்க வீரர்கள் முயன்றனர். அந்த இரசத்தில் வெள்ளைப்போளம் என்னும் போதைப் பொருள் கலக்கப்பட்டிருந்தது. ஆனால் இயேசு அதைக் குடிக்க மறுத்து விட்டார்.
24 வீரர்கள் இயேசுவைச் சிலுவை மேல் ஆணியால் அடித்தனர். இயேசுவின் ஆடையை அவர்கள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எந்த ஆடையை யார் எடுத்துக்கொள்வது என்பதுபற்றி அவர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.
25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர்.
27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர்.
28 *
29 அவ்வழியாய்ப் போகும் மக்கள் இயேசுவை அவமரியாதை செய்து பேசினார்கள். அவர்கள் தங்கள் தலையை உலுக்கி “ஆலயத்தை இடித்துப் போட்டுவிட்டு மூன்று நாட்களுக்குள் கட்டிவிடுவேன் என்றாயே.
30 ஆகவே நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள். சிலுவையில் இருந்து இறங்கி வா” என்றனர்.
31 வேதபாரகர்களும் தலைமை ஆசாரியர்களும் அங்கே அவர்களோடு இருந்தனர். அவர்களும் இயேசுவை மற்ற மக்கள் செய்த விதத்திலேயே கேலி செய்தனர். “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான். ஆனால் தன்னைத்தான் காப்பாற்ற முடியவில்லை.
32 இவன் உண்மையிலேயே கிறிஸ்து என்றால், யூதர்களின் மன்னன் என்றால் சிலுவையில் இருந்து இறங்கி வந்து தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளலாமே. நாங்கள் அதைப் பார்த்தால் இவனை நம்புவோமே” என்றனர். இயேசுவின் இருபுறமும் அறையப்பட்ட கள்ளர்களும் இயேசுவைப்பற்றி அவதூறாகப் பேசினர்.
இயேசு இறத்தல்
(மத் 27:45-56; லூ 23:44-49; யோவான் 19:28-30)
33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது.
34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”✡ என்று பொருள்.
35 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் இதனைக் கேட்டனர். அவர்கள், “கவனியுங்கள். அவன் எலியாவை கூப்பிடுகிறான்” என்றனர்.
36 ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.
37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார்.
38 இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்தது. அக்கிழிசல் மேற்புறம் தொடங்கிக் கீழேவரை வந்தது.
39 இயேசு இறக்கும்போது, அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி, “இவர் தேவனுடைய குமாரன்தான்” என்றார்.
40 சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.)
41 இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
இயேசுவின் அடக்கம்
(மத் 27:57-61; லூ 23:50-56; யோவான் 19:38-42)
42 இந்த நாள் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. (அதாவது ஓய்வு நாளுக்கு முந்தின நாள்) அன்று இருட்டத் தொடங்கியதும்
43 மரியாதைக்குரிய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காகக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் பிலாத்துவிடம் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44 ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான்.
45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான்.
46 யோசேப்பு மெல்லிய துணியை வாங்கி வந்தான். சிலுவையில் இருந்து இயேசுவின் சரீரத்தை இறக்கி அதனைத் துணியால் சுற்றினான். பிறகு அச்சரீரத்தைக் கொண்டு போய் பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். கல்லறை வாசலை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டான்.
47 இயேசு வைக்கப்பட்ட கல்லறையை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயான மரியாளும் பார்த்துக்கொண்டிருந்தனர்.