112
1 கர்த்தரை துதியுங்கள்! 
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். 
அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான். 
2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். 
நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். 
3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். 
அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும். 
4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். 
தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர். 
5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. 
தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது. 
6 அவன் விழமாட்டான், 
ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான். 
7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். 
அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான். 
8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். 
அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான். 
9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். 
அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும். 
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். 
அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். 
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். 
தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை. 
