124
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல் 
1 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? 
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு. 
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் 
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்? 
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை 
உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும், 
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும் 
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும். 
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் 
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள். 
6 கர்த்தரைத் துதியுங்கள்! 
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்குக் கர்த்தர் அனுமதிக்கவில்லை. 
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம். 
வலை அறுந்தது, நாம் தப்பினோம். 
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது. 
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். 
