16
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல் 
1 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும். 
2 நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர், 
என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன். 
3 பூமியிலுள்ள தன் சீடருக்குக் கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார். 
அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதைக் கர்த்தர் காட்டுகிறார். 
4 பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள். 
அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன். 
அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன். 
5 என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும். 
கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும். 
6 என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. 
நான் பெற்ற பங்கு மிக அழகானது. 
7 எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். 
இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன. 
8 என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். 
அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன். 
9 என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். 
என் உடலும் பாதுகாப்பாய் வாழும். 
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர். 
உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர். 
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர். 
கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும். 
உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும். 
