19
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 
1 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன. 
தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன. 
2 ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும். 
ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும். 
3 உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது. 
நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை. 
4 ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது. 
அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன. 
ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும். 
5 படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும். 
பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும். 
6 ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும். 
அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே. 
7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. 
அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். 
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. 
அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும். 
8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை. 
அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும். 
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை. 
வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும். 
9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது. 
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை. 
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை. 
தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை. 
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன. 
அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும். 
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது. 
எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும். 
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும். 
அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும். 
நீர் உதவினால் 
நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும். 
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும். 
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர். 
