23
தாவீதின் பாடல் 
1 கர்த்தர் என் மேய்ப்பர். 
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும். 
2 அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார். 
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். 
3 அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார். 
அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார். 
4 மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன். 
ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர். 
உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும். 
5 கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். 
என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 
6 என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும். 
நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன். 
