24
தாவீதின் பாடல் 
1 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை. 
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம். 
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார். 
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார். 
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்? 
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்? 
யார் அங்கு வழிபட முடியும்? 
4 தீயவை செய்யாத ஜனங்களும், 
பரிசுத்த இருதயம் உடையோரும், 
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்* பயன்படுத்தாதோரும், பொய்யும், 
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும். 
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள். 
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள். 
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள். 
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள். 
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! 
பழைமையான கதவுகளே! திறவுங்கள்! 
மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருவார். 
8 யார் இந்த மகிமைமிக்க அரசர்? 
கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். 
கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன். 
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! 
பழைமையான கதவுகளே, திறவுங்கள்! 
மகிமை மிக்க அரசர் உள்ளே வருவார். 
10 யார் அந்த மகிமை மிக்க அரசர்? 
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த அரசர். 
அவரே மகிமை மிக்க அரசர். 
