25
தாவீதின் பாடல் 
1 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன். 
2 என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். 
என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை. 
3 ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். 
ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள். 
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. 
4 கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். 
உமது வழிகளை எனக்குப் போதியும். 
5 எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். 
நீரே என் தேவன், என் மீட்பர். 
அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன். 
6 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். 
எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும். 
7 எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும். 
கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும். 
8 கர்த்தர் உண்மையாகவே நல்லவர். 
பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார். 
9 தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார். 
அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார். 
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக் 
கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர். 
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன். 
ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர். 
12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால் 
அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார். 
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான். 
தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள். 
14 தன்னைப் பின்பற்றுவோருக்குக் கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார். 
அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார். 
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன். 
தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார். 
16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். 
என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும். 
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். 
என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும். 
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். 
நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும். 
19 என் பகைவர்களையெல்லாம் பாரும். 
அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள். 
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். 
நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும். 
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். 
நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும். 
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை 
அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும். 
