71
1 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், 
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன். 
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர். 
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும். 
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும். 
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம். 
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும். 
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். 
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும். 
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை. 
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன். 
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன். 
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன். 
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன். 
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம். 
எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன். 
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன். 
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும். 
என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும். 
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள். 
அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள். 
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! 
தேவன் அவனைக் கைவிட்டார். 
அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர். 
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்! 
தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்! 
13 என் பகைவர்களைத் தோற்கடியும்! 
அவர்களை முழுமையாக அழித்துவிடும். 
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள். 
அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன். 
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன். 
நான் உம்மை மென்மேலும் துதிப்பேன். 
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன். 
நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன். 
எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன. 
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன். 
உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன். 
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர். 
இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன். 
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது. 
ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். 
உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன். 
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது. 
தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை. 
நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். 
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர். 
ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர். 
எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர். 
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும். 
தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும். 
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன். 
என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன். 
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக, 
என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன். 
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும். 
என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன். 
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும். 
என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள். 
