96
1 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! 
உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும். 
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! 
அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! 
ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்! 
3 தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். 
தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள். 
4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். 
வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர். 
5 பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே. 
ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர். 
6 அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும். 
தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும். 
7 குடும்பங்களும் தேசங்களும் 
கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள். 
8 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 
உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள். 
9 கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள். 
10 கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்! 
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை. 
கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார். 
11 விண்ணுலகங்களே! 
மகிழ்ச்சிகொள்ளுங்கள். 
பூமியே! களிகூரு. 
கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்! 
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! 
வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்! 
13 கர்த்தர் வருகிறார் ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள். 
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார். 
நீதியோடும் நியாயத்தோடும் 
அவர் உலகை ஆளுகை செய்வார். 
