97
1 கர்த்தர் ஆளுகிறார், பூமி மகிழும். 
தூரத்துத் தேசங்கள் எல்லாம் மகிழ்கின்றன. 
2 அடர்ந்த இருண்ட மேகங்கள் கர்த்தரைச் சூழும். 
நன்மையும் நீதியும் அவர் அரசை வலிமையாக்கும். 
3 கர்த்தருக்கு முன்னே ஒரு அக்கினி செல்கிறது, 
அது பகைவரை அழிக்கிறது. 
4 வானத்தில் அவரது மின்னல் மின்னுகிறது. 
ஜனங்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள். 
5 கர்த்தருக்கு முன்பு மலைகள் மெழுகு போல உருகும். 
பூமியின் ஆண்டவருக்கு முன்பாக அவை உருகும். 
6 வானங்களே, அவரது நம்மையைக் கூறுங்கள்! 
ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமையைக் காணட்டும்! 
7 ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுதுகொள்கிறார்கள். 
அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள். 
ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள். 
அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். 
8 சீயோனே, செவிக்கொடுத்து மகிழ்வாயாக! 
யூதாவின் நகரங்களே, மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்! 
ஏனெனில் கர்த்தர் ஞானமுள்ள முடிவுகளை எடுக்கிறார். 
9 மகா உன்னதமான தேவனே, மெய்யாகவே நீரே பூமியின் அரசர். 
பிற தெய்வங்களைக் காட்டிலும் நீர் மகத்துவமுள்ளவர். 
10 கர்த்தரை நேசிக்கும் ஜனங்கள் தீமையை வெறுப்பார்கள். 
எனவே தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார். 
தீயோரிடமிருந்து தேவன் தம்மைப் பின்பற்றுவோரைக் காப்பாற்றுகிறார். 
11 நல்லோர் மீது ஒளியும், மகிழ்ச்சியும் பிரகாசிக்கும். 
12 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்! 
அவரது பரிசுத்த நாமத்தை பெருமைப்படுத்துங்கள்! 
