10
1 சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
2 யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை.
3 தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை.
4 கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.
5 மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,”✡
6 ஆனால் விசுவாசத்தினாலே நீதிமானாவதைப் பற்றி வேதவாக்கியம், “யார் மோட்சத்துக்குப் போகக் கூடியவன் என்று நீ உனக்குள்ளே சொல்லாதே.” (இதற்கு “எவனொருவன் மோட்சத்துக்குப் போய் கிறிஸ்துவை பூமிக்கு அழைத்து வரக்கூடியவன்?” என்று பொருள்)
7 “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது.
8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும்.
9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய்.
10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.
11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை”✡ என்று எழுதப்பட்டிருக்கிறது.
12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார்.
13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்”✡ என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும்.
15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன”✡ என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?”✡ என்று கேட்கிறார்.
17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” சங்கீதம் 19:4
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர்.முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.” உபா. 32:21
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன். ஏசாயா 65:1
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்” ஏசாயா 65:2
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.