தேவனும் யூதமக்களும்
9
1 நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன.
2 எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
3 அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
4 அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார்.
5 அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.
6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள்.
7 ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்”✡ என்று கூறினார்.
8 ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால்
9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்”✡ என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.
10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு.
11-12 இரு மகன்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த மகன் இளையவனுக்கு சேவை செய்வான்”✡ என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல.
13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்”✡ என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே.
15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.”✡ என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார்.
16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது.
17 “நான் உன்னை அரசனாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்”✡ என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது.
18 எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.
19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம்.
20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா?
21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.
22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்.
23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார்.
24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
என்று நான் அழைப்பேன். ஓசியா 2:23
26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” ஓசியா 1:10
என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.
“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”.ஏசாயா 10:22-23
29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்” ஏசாயா 1:9
என்று ஏசாயா சொன்னார்.
30 இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே.
31 ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை.
32 காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள்.
33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
“பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன்.
அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும்.
அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும்.
ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.” ஏசாயா 8:14; 28:16
✡ 9:7: ஆதி. 21:12-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 9:9: ஆதி. 18:10-14-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 9:11-12: ஆதி. 25:23-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 9:13: மல்கியா 1:2-3-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 9:15: யாத். 33:19-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
✡ 9:17: யாத். 9:16-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.